முறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி

முறிகள் மோசடி இடம்பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தி

by Staff Writer 27-02-2020 | 8:57 PM
Colombo (News 1st) இதுவரையில் எவருக்கும் தண்டனை வழங்கப்படாத இலங்கையின் பாரிய நிதி மோசடியான மத்திய வங்கி மோசடி இடம்பெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் கடந்துள்ளன. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி உரிய நடவடிக்கை மற்றும் வழிமுறைகளை மீறி, இலங்கை வரலாற்றின் பாரிய நிதி மோசடி இடம்பெற்றது. இந்த முறிகள் ஊழலுடன் தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் தொடர்புபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் இந்த ஊழலுடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனவும் நிதியைப்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் இதுபோன்றதொரு நாளில், ஒரு பில்லியன் முறிகளுக்கான விலை மனுவை இலங்கை மத்திய வங்கி முன்வைத்தது. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன், 1 பில்லியன் ரூபாவிற்கு முறிகளை விநியோகிக்கும் தீர்மானத்தை மாற்றி 10 பில்லியன் வரை விலை மனுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார். குறித்த 10 பில்லியன் முறிகளில் பாரிய பங்கு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதிக வட்டி வீதத்திற்கு அதிலொரு பங்கு பெறப்பட்டுள்ளது. பல தரப்பினர் இதனை நியாயப்படுத்துவதற்கு இரண்டு வருடங்களாக முற்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது முறிகள் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது. மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கலுக்கான பொறுப்பை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு 2016 ஆம் ஆண்டு வௌிக்கொணர்ந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், இலங்கை மத்திய வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் சில அதிகாரிகள், மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என 2017 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்தது. அதற்கமைய, அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பின்புலத்தில், தொடர்ந்தும் வௌிநாடொன்றில் அவர் மறைந்துள்ளார். இந்த ஊழல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அனுமானிக்கப்பட்டது. இந்த ​மோசடியின் சுமை அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கும் அதிகக் காலம் நாட்டு மக்களின் மீது செல்வாக்கு செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.