ஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்த SLC தலைவர்

ஊழலை அம்பலப்படுத்தியதால் சீற்றமடைந்தார் கிரிக்கெட் நிறுவன தலைவர்

by Staff Writer 27-02-2020 | 8:49 PM
  Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பின்னர் சூரியவெவ மைதானத்திற்கு அருகில் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இது தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாகக் கேள்வியெழுப்பியமைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் இன்று சீற்றத்துடன் பதிலளித்தார்.
நேற்றைய சம்பவத்துடன் ஒப்பிட்டு நீங்கள் கூறும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்கான தேவை இல்லை. இழைக்கப்பட்ட தவறுக்கு நாம் மன்னிப்புக் கோருகின்றோம். தவறுக்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். பொறுப்புக்கூறலிலிருந்து நாம் விலகிச்செல்ல மாட்டோம். எமக்கு அடிப்படை கொள்கையொன்று இருக்கின்றது. உங்களது தேவைக்கேற்றவாறு எம்மால் செயற்பட முடியாது. வேறு எந்தவொரு தொலைக்காட்சியும் எமது செயற்பாடுகள் தொடர்பில் கேள்வியெழுப்பவில்லை. தினமும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை பற்றி குறைகூறுவது நீங்கள் தான்.
என இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா குறிப்பிட்டார். நேற்றைய சம்பவத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் மன்னிப்புக் கோரியுள்ளமை பாராட்டப்படக்கூடியது. எனினும், அவர் போன்ற தரப்பினர் அல்லது மக்களது பணத்தில் செயற்படும் அரசியல்வாதிகள், அதிகாரிகளது தவறுகளை நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டுவதை எவராலும் நிறுத்த முடியாது. அது நியூஸ்ஃபெஸ்ட் முன்னெடுக்கும் மக்களுக்கான கடமை!