by Staff Writer 25-02-2020 | 8:55 PM
Colombo (News 1st) யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த பகிடிவதை சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பில் பூர்வாங்க விசாரணை நடத்துவதற்காக ஐவர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டதுடன், அந்தக் குழுவின் ஆரம்ப விசாரணை அறிக்கையே வெளியாகியுள்ளது.
வட்ஸ்அப் உரையாடல் மூலம் சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்கள் என்ற படிநிலையை இந்த பீடத்தில் அமுல்படுத்தும் நிலையிலான பகிடிவதைகள் இடம்பெற்றுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட மாணவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இந்த பீடத்தின் 3 ஆம் அணி மாணவர்கள் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த பின்னர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் விசாரணைகளில் இடையூறு செய்யும் வகையிலான அல்லது கனிஷ்ட மாணவர்களை அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகளும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளும் வட்ஸ்அப் உரையாடல்களில் சிரேஷ்ட மாணவர்களால் கனிஷ்ட மாணவர்களுக்குப் பகிரப்பட்டுள்ளன.
இந்தக் காரணங்களுக்காக 6 மாணவர்களுக்கு தற்காலிகமாக பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 6 மாணவர்கள் மேற்படி விடயங்களுக்கு உடந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் இதனால் 12 மாணவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு விசாரணை நடைபெறவுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.