by Bella Dalima 19-02-2020 | 4:38 PM
Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1770-இல் இருந்து 1900 ஆக அதிகரித்துள்ளது. 72,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான நாணயத்தாள்களை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் பணத்தை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹாங்காங்கில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ளார்.
அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் பதிவாகும் இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
கொரோனா வைரஸ் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதில் பிலிப்பைன்ஸ், ஜப்பான், தைவான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் கொரோனா வைரஸிற்கு பலியாகி இருக்கிறார்கள். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இன்று கப்பலை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்ற ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்தது.
இதனையடுத்து, 2,666 பயணிகள் மற்றும் 1,045 ஊழியர்கள் என 3,711 பேருடன் அந்த கப்பல் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்து பயணிகள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.
பின்னர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களை கப்பலில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பிற்கு பிறகு அவர்கள் இன்று கப்பலில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இன்று சுமார் 500 பேர் மட்டுமே வெளியேறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மருத்துவப் பரிசோதனை அறிக்கை அதிகாரப்பூர்வமாக கிடைப்பதைப் பொருத்து, அனைத்து பயணிகளும் வெளியேற இன்னும் மூன்று நாட்கள் வரை ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் செஞ்சிலுவை சங்க மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6,000 முகமூடிகள் திருட்டுப்போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவர்களும் ஊழியர்களும் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் கொரோனா வைரஸ் முகமூடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை திருட்டுப்போயுள்ளன.
ஜப்பானில் முகமூடிகளுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்க அவை திருடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.