by Staff Writer 13-02-2020 | 8:58 PM
Colombo (News 1st) பொதுஜன முன்னணியின் தவிசாளருக்கு அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தமையால், ஜா-எல நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.
சபை கூடிய சந்தர்ப்பத்தில் சுமார் 50 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் நகர சபை செயலாளரினால் நீக்கப்பட்டதாகத் தெரிவித்து, தவிசாளர் ஷம்மிக டயஸ் விவாதமொன்றை ஆரம்பித்தார்.
பின்னர் குறித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வாக்கெடுப்பிற்கு செல்வது தொடர்பில் தவிசாளர் வினவியபோது, பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தவிசாளர் திட்டங்களை நிறைவேற்றினார்.
நகர சபையின் செயற்பாடுகளை செயற்றிறன் அற்றதாக மாற்றுவதற்காக, மாற்று அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் நகர சபை செயலாளர் செயற்படுவதாக தவிசாளர் கூறினார்.
ஜா - எல பொதுஜன முன்னணியின் அமைப்பாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மெரில் பெரேராவின் தலையீட்டின் கீழ், இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த செயலாளர் நகர சபைக்கு நியமனம் பெற்று வந்ததாக தவிசாளர் குறிப்பிட்டார்.
ஜா - எல நகர சபையில் தவிசாளர் உட்பட 17 ஆசனங்களுள்ளன.
அவர்களில் 8 பேர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் 7 பேர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாவர்.
ஏனைய இரண்டு உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக உறுப்பினர்களுள்ள போதிலும், பொதுஜன பெரமுனவின் ஷம்மிக்க டயஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.