GSP+ வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது: ஐரோப்பிய ஆணைக்குழு

by Staff Writer 12-02-2020 | 6:21 PM
Colombo (News 1st) கடந்த இரண்டு ஆண்டுகளில் GSP+ வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான GSP+ வரிச்சலுகை தொடர்பிலான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிச்சலுகையுடன் தொடர்புடைய விடயங்களான வேலையில்லா பிரச்சினை, பாதுகாப்பு, குற்றச்செயல்களைத் தடுப்பது உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பலர் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையின் நிலவரம் தொடர்பில் கடந்த காலங்களில் ஆராய்ந்திருந்ததாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை ரீதியில் நோக்கும் போது, இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஒப்பந்தத்துடன் ஒன்றுபட்டு செயற்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், அந்த செயற்பாடுகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருவதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல் திரட்டை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பூரணமான தகவல் திரட்டை தயாரிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் வார நாட்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை தமது அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார். 011 205 65 04 மற்றும் 011266 71 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றோ தகவல்களை வழங்க முடியும்.