by Staff Writer 12-02-2020 | 4:10 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
எலும்புகள் மீட்கப்பட்ட இடத்தை இன்று பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிபதி, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு பிரிவிற்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்திலேயே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் தற்போது இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மாங்குளம் வைத்தியசாலைக்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ்.லெனின்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, நாளைய தினம் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.
எனினும், குறித்த எலும்புக்கூடுகள் மனித எச்சங்களா என்பது குறித்து தௌிவாகக் கூற முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவானின் உத்தரவிற்கு அமைய, எலும்புக்கூடுகள் காணப்படும் பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.