இந்திய அணியை வீழ்த்தி சாம்பியனானது அவுஸ்திரேலியா

இந்திய மகளிர் அணியை வீழ்த்தி சாம்பியனானது அவுஸ்திரேலிய அணி

by Staff Writer 12-02-2020 | 8:57 PM
Colombo (News 1st)  அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பங்கேற்ற முக்கோண இருபதுக்கு 20 தொடரில் அவுஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியனானது. இவர்கள் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றனர். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான பெத் மூனி ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றார். 156 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணி 65 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது. எனினும், ஸ்மிருதி மந்தனா 12 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுப்படுத்தினார். ஏழு வீராங்கனைகள் 15-க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. எதிர்வரும் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான முன்னோடியாக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.