by Staff Writer 11-02-2020 | 7:23 PM
Colombo (News 1st) வெள்ளை வேனில் அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, பலாத்காரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து முறைப்பாடு செய்த சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் (Garnier Banister Francis) தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தவர்கள் குறித்து நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டது.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று இந்த விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, ஊடகவியலாளர் அனுரங்கி பிரியங்வதா ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக அதிகாரியின் கணவர், மற்றுமொரு பெண்ணினுடைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதம நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.