அரச தொழிலை இழந்தவர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்றும் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 11-02-2020 | 8:01 PM
Colombo (News 1st) வீடமைப்பு அபிவிருத்தி, தொல்பொருள், திட்ட உதவி உள்ளிட்ட சில அரச நிறுவனங்களில் தொழிலை இழந்த சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீள தொழில் வழங்குமாறு கோரி திட்ட உதவியாளர்கள் சிலர் இன்று முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது. காலி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே அமைதியின்மை ஏற்பட்டது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீடமைப்பு அதிகார சபையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது தொழிலை இழந்துள்ள சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர். மூன்று வருடங்களுக்கும் அதிகக்காலம் சேவை உறுதி செய்யப்படாத 2400 -இற்கும் அதிக ஊழியர்களை மீண்டும் நிரந்தரமாக சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் அறிவியல் திணைக்களத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தொழிலை இழந்த சிலரும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்களை ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார இன்று பிற்பகல் சந்தித்தார். ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அரசியல் பேதங்களின்றி அனைவருக்கும் தொழில் வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டார். பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு கலந்துரையாட வருமாறு கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நாளை (12) பிற்பகல் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்ததை அடுத்து, வீடமைப்பு அதிகார சபையில் தொழிலை இழந்தவர்கள் மற்றும் அபிவிருத்தி உதவி உத்தியோகத்தர்களாக செயற்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.