வீடமைப்பு திட்டத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 08-02-2020 | 8:28 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஐக்கிய இலங்கையில் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் தொடர்பிலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாக நரேந்திர மோடி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளும் மனிதாபிமான அணுகுமுறைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்கும் நிகழ்வு இன்று முற்பகல் புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்ட்ரபதிபவனில் இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை வரவேற்றதன் பின்னர், ஜனாதிபதியையும் சந்தித்துக் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்,
இரு நாடுகளினதும் கேந்திரப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. புலனாய்வு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கி வரும் நாடு. இந்த ஆதரவினை எதிர்வரும் காலங்களிலும் தொடர்வதற்கான எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது. எமது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய மார்க்கம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதுடன், இந்தியாவின் ஆதரவையும் அதற்காக எதிர்பார்த்துள்ளோம். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக 400 மில்லியன் டொலர் கடன் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக 50 மில்லியன் டொலர் கடன் உதவி வழங்கியமை தொடர்பிலும் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இந்தியா வழங்குவதாகத் தெரிவித்திருந்த கடன் உதவிகள் தொடர்பில் நாங்கள் மீண்டும் கலந்துரையாடினோம். இலங்கையில் இந்தியாவின் உதவியில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் மற்றும் பிரஜைகள் ஊக்குவிப்புத் திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தினோம். இதற்கு முன்னர் இந்தத் திட்டங்களுக்கான உதவித் தொகை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த உதவி எமது நாட்டில் கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்கு சிறந்த முத்தாய்ப்பாக அமையும் என நம்புகின்றேன்.
என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு கருத்துக் கூறினார்
இலங்கையின் நிலைபேண்தன்மை , பாதுகாப்பு மற்றும் அமைதி மாத்திரம் இந்தியாவின் ஈடுபாடு இல்லை. முழு இந்து சமுத்திரம் தொடர்பிலும் அக்கறை கொண்டுள்ளோம். எனவே, இந்து - பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு எமது கூட்டுறவு மிகவும் பெறுமதியானது. இதனால் எமது அயலுறவு முதன்மையானது, கொள்கைகள் மற்றும் சமுத்திரக் கோட்பாடுகளுக்கு இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவோம். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு இந்தியாவுடன் இணைந்து இலங்கை முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்தும் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் பொலிஸ் அதிகாரிகள் இந்தியாவின் முன்னணி பயிற்சி நிலையங்களில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இன்று முற்பகல் சந்தித்தார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில நாட்களின் பின்னரான பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலான செய்தியாக அமைந்ததாக இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்த சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று பிற்பகல் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.