கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆனது

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு; அமெரிக்கர் ஒருவரும் பலி

by Bella Dalima 08-02-2020 | 4:52 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஹாங்காங்கில் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை தவிர பிற பகுதிகளில் 270 நோயாளிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் இதுவரை 25 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் மேலும் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன், வைரஸ் தொற்றுக்குள்ளான 2841 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஹூபெய் மாகாணத்தில் மாத்திரம் 24,953 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, நாடளாவிய ரீதியில் 34,000 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, வுஹானில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது, வைத்தியர் லீ வென்லியாங்-இற்கும் (Li Wenliang) வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. அவர் நேற்று உயிரிழந்தார். சார்ஸ் வைரஸ் என அவரால் கருதப்பட்ட இந்த கொடிய வைரஸ் தாக்கம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், மக்களிடையே தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாமென அவர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டிருந்ததுடன், வதந்திகளைப் பரப்புவதாகத் தெரிவித்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பிரஜை ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.