ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும் மனைவியும் வௌிநாடு தப்பியோட்டம்

by Staff Writer 05-02-2020 | 9:12 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அவர்களது வீட்டிற்கு சென்றிருந்த போது அவர்கள் அங்கிருக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த இருவரும் நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார். கபில சந்திரசேனவிற்கு சொந்தமானது என கூறப்படுகின்ற வீட்டிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (04) சென்றிருந்தனர். அவர்களைக் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க நேற்று முன்தினம் பிறப்பித்த பிடியாணைக்கு அமையவே அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு எயார் பஸ் ரகத்தைச் சேர்ந்த 10 விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சத்தைப் பெற்று அவுஸ்திரேலிய வங்கியொன்றில் வைப்பிலிட்டதன் மூலம் நிதி தூய்தாக்கலில் ஈடுபட்டதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த 2 மில்லியன் டொலரும் சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றுக்கு கிடைத்திருந்தமை குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணையில் தெரியவந்தது.