தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு பெருவிழா

பக்திபூர்வமாக நடந்தேறிய தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு பெருவிழா

by Bella Dalima 05-02-2020 | 6:40 PM
Colombo (News 1st) தமிழும் சமஸ்கிருதமும் சங்கமிக்க உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு பெருவிழா இன்று பக்திபூர்வமாக நடந்தேறியது. தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப்பெரிய பங்கு வகித்த வரலாற்று சின்னமாகவும் இந்து மதத்தின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய, அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாகவும் விளங்குவது தஞ்சை பெருங்கோவில். 1003 ஆம் ஆண்டில் தொடங்கிய தஞ்சை பெருங்கோவிலின் கட்டுமானப் பணிகள் 1010 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 7 வருடங்களில் பல சிறப்புகளுடன் கூடிய தஞ்சை பெருங்கோவில் அமைக்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு கண்ட பெருவுடையாரை வழிபடுவதற்காக உலகளாவிய ரீதியில் இருந்து வருகை தந்த இலட்சக்கணக்கான சிவனடியார்கள் தஞ்சையில் திரண்டனர். சமஸ்கிருத வேத பாராயணத்துடன் தமிழில் திருமுறைகள் ஓதப்பட்டு பக்திபூர்வமாக குடமுழுக்கு பெருவிழா நடத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் காலை 10 மணிக்கு மூலவருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. உலகின் புகழ்பூத்த சிவாச்சாரியார்கள் ஆகம விதிப்படி நடத்திய கிரியைகளில் இலங்கையின் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய குருக்கள் சிவஶ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்களும் பங்கேற்றிருந்தார். கும்பாபிஷேக பெருவிழாவின் நிறைவாக இன்றிரவு தஞ்சை பெரிய கோவிலின் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகின்றது