CAA வழக்குகள் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றம்

by Bella Dalima 22-01-2020 | 3:37 PM
Colombo (News 1st) இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (Citizenship Amendment Act - CAA) எதிரான வழக்குகள் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளன. தாக்கல் செய்யப்பட்டுள்ள 143 மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட 143 மனுக்கள் மீதான வழக்கு, இந்திய உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தமக்கு வழங்கப்பட்ட 60 மனுக்களுக்கும் பதில் மனு தயாராக உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இதன்போது தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி போப்டே, அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமான உத்தரவை பிறப்பிக்கப் போவதில்லை என கூறியுள்ளார். புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 80 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்படுமெனவும் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது, உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றங்களுக்கு தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.