சிரேஷ்ட அறிவிப்பாளர் A.R.M. ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம்

by Staff Writer 21-01-2020 | 8:24 PM
Colombo (News 1st) :- காலஞ்சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் அல்ஹாஜ் A.R.M. ஜிப்ரியின் ஜனாஸா இன்று (21) மாலை சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் அங்கு பெருந்திரளான மக்கள் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர். அன்னாரின் ஜனாஸா இன்று (21) காலை பாணந்துறை இல்லத்தில் இருந்து அவரது சொந்த ஊரான சாயந்தமருதிற்கு எடுத்துச்செல்லப்பட்டு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊடகத்தை அறிவியலூடாக அணுகி அடுத்த சந்ததியினருக்கு ஆரோக்கியமான ஊடக கலாசாரத்தை கற்றுக்கொடுத்த சிரேஷ்ட ஊடகவியலாளர் A.R.M. ஜிப்ரி தனது 60 ஆவது வயதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (20) இரவு காலமானார். 1956 ஆம் ஆண்டு பிறந்த A.R.M. ஜிப்ரி கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை மற்றும் கல்முனை சாஹிரா கல்லூரி என்பவற்றில் கல்வி பயின்று குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளொமா பெற்ற புகழ்பெற்ற ஓர் விஞ்ஞானப் பாட ஆசிரியராவார். கலைமாணி மற்றும் முதுமாணி பட்டங்களை பெற்றுக்கொண்ட சிரேஷ்ட அறிவிப்பாளரான A.R.M. ஜிப்ரி , களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி மற்றும் தொட்டவத்தை அல் பஹ்ரியா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும், நாடு தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த 10 அதிபர்களில் இவரும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டத்தாபனம் என்பவற்றில் நீண்ட காலம் பணிபுரிந்த A.R.M. ஜிப்ரி சக்தி தொலைக்காட்சியில் ஔிபரப்பான அறிவு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி தனது சிம்மக்குரல் மூலம் புகழ்பெற்றார். இவ்வாறு தனது இனிமையான குரல் மற்றும்  அறிவுக்களஞ்சியம் மூலமும் நாட்டின் புகழ்பெற்ற அறிவிப்பாளராக உள்ளங்களை வென்ற A.R.M. ஜிப்ரியின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும்.