சீனா செல்லும் இலங்கையருக்கு விசேட ஆலோசனை

சீனா செல்லும் இலங்கையருக்கு சுகாதார அமைச்சு விசேட ஆலோசனை

by Staff Writer 18-01-2020 | 4:37 PM
Colombo (News 1st) சீனாவிற்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு சுகாதார அமைச்சினால் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது சீனாவில் பரவும் கொரோனா வைரஸை கருத்திற்கொண்டு இந்த ஆலோசனைகள் வௌியிடப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், சீனாவில் சுற்றுலா மேற்கொள்வோர் அங்குள்ள பொது இடங்களுக்கு செல்வதைக் குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் பரவியுள்ள கொரோனா வைரஸினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டவர்களில் 50 பேர் வரை தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தமக்கு அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் ஏற்படுவதற்குரிய ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சீனாவிற்கான பயணத்தடையை விதிக்குமாறு எந்தவொரு நாட்டிற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இலங்கைக்கு வருகை தரும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் காணப்படுகின்றது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் மாதாந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த மூன்று மாதங்களில் 409 சீன சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நாட்டில் சுமார் 10,000 சீனப் பிரஜைகள் தொழில் நிமித்தம் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.