மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

by Staff Writer 13-01-2020 | 6:52 PM
Colombo (News 1st) வேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டவாறு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பிலான பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என அவர் எங்களிடம் கூறியுள்ளார். மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தற்போதுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய 50,000 இற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாக கூறப்படுகின்றதாக குறிப்பிட்டார். இவர்கள் உள்வாரிப் பட்டதாரிகளா வௌிவாரிப் பட்டதாரிகளா என்பதை பார்ப்பதில்லை, 35 வயதுக்கு குறைந்தவர்களா மேற்பட்டவர்களா என்பதை பார்க்க வேண்டாம் எனவும் அவர்களது பட்டம் என்ன என்பது தொடர்பில் பார்க்க வேண்டாம், திறமையை மாத்திரம் பாருங்கள் எனக் கூறியுள்ளார். விசேடமாக கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, ஆங்கில மொழி, சர்வதேச மொழிகள் தொடர்பில் பட்டம் பெற்ற அனைவரும் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் பாரியளவில் காணப்படுகின்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன், பிக்குகள் இனி ஒருபோதும் அபிவிருத்தி அதிகாரிகளாக ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது குறிப்பிட்டுள்ளார்.