Colombo (News 1st) பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்றலில் 1000 இற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரக மதிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், காவலரணொன்றின் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கட்டைப் ஹெல்புல்லா ஆயுதக்குழுவின் தளங்கள் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 25 போராளிகள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலொன்றில் அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈராக்கிய பிரதமர் அடேல் அப்துல் மெஹ்டி கண்டனம் வௌியிட்டுள்ளார்.
ஈராக்கின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்காவால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, அமெரிக்காவுடான ஈராக்கின் உறவு குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென பிரதமர் அடேல் அப்துல் மெஹ்டி தெரிவித்துள்ளார்.