இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்கள்

by Staff Writer 19-12-2019 | 8:38 PM
Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்களை இன்றைய முதல் நாள் முடிவில் பெற்றிருந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. கராச்சியில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சார்பாக ஷான் மசூட் மற்றும் அபிட் அலி ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கியது. ஷான் மசூட் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித்தலைவர் அஷார் அலி ஓட்டமின்றி வெளியேறினார்​. முதல் போட்டியில் சதமடித்த அபிட் அலியால் 38 ஓட்டங்களையே பெற முடிந்தது. பாபர் அசாம் மற்றும் அசாத் ஷாபிக் ஜோடி 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஆறுதல் கொடுத்தது. பாபர் அசாம் 60 ஓட்டங்களையும், அசாத் ஷாபிக் 63 ஓட்டங்களையும் பெற்றனர். கடைசி 4 விக்கெட்கள் 19 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸ் 191 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்துவீச்சில் லஹிரு குமார, லசித் அம்புல்தெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்களையும் விஸ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலளித்தாடும் இலங்கை அணி 28 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஓஷத பெர்னாண்டோ 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் வெளியேறினர்​. இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களுடனும் லசித் அம்புல்தெனிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.