கைலாசாவில் குடியேற 40 இலட்சம் பேர் விண்ணப்பம்

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவிப்பு

by Bella Dalima 17-12-2019 | 4:46 PM
Colombo (News 1st) கைலாசா நாட்டில் குடியுரிமை கோரி உலகெங்கிலும் இருந்து 40 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால் கைலாசா நாட்டை அமைத்தே தீருவேன் என நித்யானந்தா தெரிவித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் மகள்களைக் கடத்தி ஆசிரமத்தில் சிறை வைத்துள்ளதாக குஜராத் பொலிஸில் நித்யானந்தாவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர். பாலியல் துஷ்பிரயோக வழக்கு ஒன்றில் கர்நாடகா பொலிஸாரும் தேடுவதால் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடினார். அவர் மீது பல மோசடி வழக்குகளும் உள்ளன. நித்தியானந்தா ஈக்வடோர் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் அண்மையில் தகவல் வௌியானது. இந்நிலையில், அவர் நேற்று (16) சமூக வலைத்தளத்தில் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதில், கைலாசா நாட்டில் குடியுரிமை கோரி உலகம் முழுவதும் இருந்து 40 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் சூளுரைத்துள்ளார். நித்யானந்தா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வரும் வீடியோக்களை பொலிஸார் ஆய்வு செய்ததில், அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு தீவில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.