மின் சக்தி தேவையை பூர்த்தி செய்வது தொடர்பில் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

by Staff Writer 13-12-2019 | 7:38 PM
Colombo (News 1st) மின் சக்திக்கான தேவையை பூர்த்தி செய்வது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, இலங்கை பேண்தகு சக்திவலு அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மின்சக்தி அமைச்சரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மின் உற்பத்தி துறையில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் புதிய செயற்திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின் உற்பத்தி துறை சார்ந்த முன்மொழிவுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நாட்டில் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் வெளிநாடுகளைத் தெளிவுபடுத்தி புதிய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.