வைத்தியர் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

குருணாகல் வைத்தியர் சாஃபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 12-12-2019 | 6:45 PM
Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக முறையற்ற வகையில் சொத்து சேகரித்தமை மற்றும் தாய்மார்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார். கட்டில் இலக்கத்தை மாற்றி சிசுவொன்றை விற்பனை செய்தமை தொடர்பில் அடுத்தகட்ட வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இதனிடையே, திணைக்களம் மட்டத்தில் ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றிருப்பின் அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, குறைபாடாகக் காணப்படும் சாட்சிகள் குறித்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தமது சேவை பெறுநர் மாதந்தோறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுவதாகவும் இதன் காரணமாக மட்டக்களப்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அலுவலகத்திற்கு செல்வதற்கான அனுமதியை வழங்குமாறும் பிரதிவாதியான வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி சார்பில் மன்றில் ஆஜராகிய நீதிபதிகள் குழாம் கோரிக்கை விடுத்தது. எனினும், இந்த கோரிக்கையை ஆட்சேபித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபரான வைத்தியர் இரண்டு தடவைகள் பிணை நிபந்தனையை மீறியுள்ளதாக மன்றுக்கு அறிவித்துள்ளனர்.