13 ஆவது ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்கள்

by Staff Writer 03-12-2019 | 10:29 PM
Colombo (News 1st) 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றதுடன், அதில் மாலைத்தீவுகளின் சாயித் ஹசான் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். 100 மீட்டரை அவர் 10.49 செக்கன்ட்களில் கடந்தார். இது 35 வருட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய விளையாட்டு விழாவில் மாலைத்தீவுகள் வெற்றி கொண்ட முதல் தங்கப்பதக்கமாகும். கடந்த தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்த ஹிமாஷ ஹேஷானால் இம்முறை வெள்ளிப்பதக்கத்தையே வெல்ல முடிந்தது. 100 மீற்றர் தூரத்தை கடக்க ஹிமாஷ ஹேஷான் 10 தசம் ஐந்து பூச்சியம் செக்கன்களை எடுத்துக் கொண்டார். இதேவேளை, மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு இன்று இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்தன. அதன்படி, முதல் தங்கப்பதக்கத்தை மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் நிலானி ரத்நாயக்க வென்று கொடுத்ததோடு , அதற்காக அவர் 4 நிமிடங்கள் 34 செக்கன்ட்கள் மற்றும் 34 மில்லி செக்கன்ட்களை எடுத்துக்கொண்டார். இதனிடையே, இரண்டு அம்சப் போட்டிகளில் இலங்கை ஒரு தங்கப்பதக்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்களை வெற்றிகொண்டது. அதன்படி, இரண்டு அம்ச போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு தங்கப்பதக்கத்தை எரங்கா துலக்ஷி வென்று கொடுத்தார் இந்தப் போட்டியின் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவுகளிலும் இலங்கைக்கு வெண்கலப்பதக்கங்கள் கிடைத்தன. அமாஷா டி சில்வா மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வெற்றி கொண்டதுடன், அதற்காக அவர் 11.82 செக்கன்ட்களை எடுத்துக்கொண்டார். 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 11.84 செக்கன்ட்களில் கடந்த லக்ஷிகா சுகந்தி போட்டியில் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.