by Staff Writer 24-11-2019 | 9:27 PM
Colombo (News 1st) பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டின்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இரு அணிகளினதும் கன்னி பகலிரவு போட்டியாக இது பதிவானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.
நேற்றைய இரண்டாம் நாளில் பங்களாதேஷூக்கு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன் கைவசம் 4 விக்கெட்கள் எஞ்சியிருக்க மேலும் 89 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது.
இன்றைய மூன்றாம் நாளில் 59 ஓட்டங்களுடன் களமிறங்கிய முஸ்பிகுர் ரஹீம் 74 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
பங்களாதேஷ் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இதன்மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை ஈட்டிய முதல் அணியாக இந்தியா பதிவானது.
அத்துடன், டெஸ்ட் அரங்கில் இந்தியா தொடர்ச்சியாக அடையும் ஏழாவது தொடர் வெற்றி இதுவாகும்.
போட்டியில் 9 விக்கெட்களை வீழ்த்திய இசான்ட் ஷர்மா போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.