Colombo (News 1st) இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று பிற்பகல் அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வேட்பாளர்களின் வருகையின் பின்னர் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவினை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
இதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
இலங்கை பிரஜைகள் அனைவரதும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் ஜனநாயக நாடாக செயற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம். காணாமற்போயுள்ள மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்காக செயற்படுமாறு இறுதி கோரிக்கையை முன்வைக்கின்றேன்
என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நாட்டு மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து, ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
ஒருமித்த இலங்கைக்குள் அனைத்து மக்கள் சமூகத்தினர், அனைத்து சமய மற்றும் இனத்தினரை ஒன்றிணைத்து, சுபீட்சமான தாய்நாட்டினை ஆட்சி செய்ய சாதாரண பிரஜை என்ற வகையில், புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு நல்குவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
இதேவேளை, மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாப்பதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
எனக்கு வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, எதிராக வாக்களித்த அனைவரும் நாட்டின் பிரஜைகள் என்பதை நான் அறிந்துள்ளேன். இன,மத பேதங்களை பார்க்காது இலங்கையர் என்ற வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்ய நான் நிச்சயமாக முன் நிற்பேன்
என கோட்டாபய ராஜபக்ஸ கூறினார்.