கோட்டாபயவிற்கு சஜித் வாழ்த்து

கோட்டாபயவிற்கு சஜித் வாழ்த்து; அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிப்பு

by Staff Writer 17-11-2019 | 7:05 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று பிற்பகல் அறிக்கையொன்றை வெளியிட்டார். கடும் போராட்டம் மற்றும் விறுவிறுப்பான தேர்தலின் இறுதியில், மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். வாக்காளர்களின் தீர்மானத்திற்கு அமைய, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும் சஜித் பிரேமதாச இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், அரசியல் பயணத்தில் தமக்காக முன்நின்ற மக்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் கலந்துரையாடி, அரசியல் வாழ்க்கையின் எதிர்காலம் மற்றும் தனது வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்துள்ள தாம், எப்போதும் அவர்களின் நம்பிக்கைக்குரிய சேவகனாக இருக்கப்போவதாகவும் தனது அறிக்கையின் ஊடாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து தமக்கு வாக்களித்த பிரஜைகளுக்கு இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ள அவர், தம்மீது நம்பிக்கை வைத்தமையை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதாகவும் மக்களிடம் கூறியுள்ளார். தமது 26 வருட அரசியல் வாழ்க்கையில் மக்களின் ஒத்துழைப்பே தமக்கு சக்தியை வழங்கும் ஊற்றாக மாறியுள்ளதென்பதே அவரது நம்பிக்கையாகும். தமது தேர்தல் நடவடிக்கைகளை சிரமம் பாராது முன்னெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் சஜித் பிரேமதாச, மக்களின் அர்ப்பணிப்பை தாமும் தமது குடும்பத்தினரும் என்றும் மறக்கப்போவதில்லை என கூறியுள்ளார். சுயாதீன நாடொன்றில் அமைதியான தேர்தலொன்று இம்முறை நடைபெற்றதாகவும், கடந்த 5 வருடங்களாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக மறுசீரமைப்பின் பெறுபேறே அதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7 ஆவது ஜனாதிபதி என்ற ரீதியில் இந்த செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு சென்று, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் ஒழுக்க விழுமியங்களை பலப்படுத்தி, அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்லுக்கு பின்னரான காலப்பகுதியில் அமைதியை உறுதிப்படுத்துமாறும் தமக்கு ஆதரவு வழங்கியமைக்காக எந்தவொரு பிரஜையையோ கட்சி ஆதரவாளர்களையோ துன்புறுத்தாது, எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டளவில் வீடுகளை உரித்துடைய சமூகமொன்றை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கி, இந்த அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சராக கடந்த 5 வருடங்களாக சேவையாற்ற கிடைத்தமை பாக்கியமாக கருதுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அது பிரஜைகளின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் நேர்மையான முயற்சி என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என நம்புவதாகவும், சஜித் பிரேதமாச தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.