by Staff Writer 17-11-2019 | 7:18 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வௌியாகியதை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
நிதி அமைச்சர் பதவியிலிருந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் என ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் வழங்கியுள்ள தௌிவான தீர்மானத்தை மதித்து, மக்களின் இறுதி தீர்மானத்திடம் எதிர்காலத்தை ஒப்படைத்து, தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மங்கள சமரவீர ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தாம் வகித்த அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்வதாகவும் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஹரின் பெர்னாண்டோ, தனது மக்கள் சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அமைச்சரவை அந்தஸ்தற்ற தனது அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதாக அஜித் பி. பெரேரா தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச சிறப்பாக போட்டியிட்டதாகக் குறிப்பிடும் அஜித் பி. பெரேரா, இந்த தீர்மானமிக்க தருணத்தில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் தொடர்ந்தும் நாட்டிற்கு அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் வீதி அபிவிருத்தி, பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்து கபீர் ஹாசிம் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.