ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

by Bella Dalima 15-11-2019 | 9:05 PM
Colombo (News 1st) வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இது தொடர்பில் விளக்கமளித்தார். அவர் தெரிவித்ததாவது,
  • ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற வீதம், வாக்களிப்பு நிலையங்களில் மாத்திரம் 25,312 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • நாடளாவிய ரீதியில் 3043 பொலிஸ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
  • நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில், 153 கலகத்தடுப்பு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
  • தேர்தலை முன்னிட்டு 190 பொலிஸ் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • அனைத்து கடமைகளுக்காவும் 60,175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நடமாடும் சேவையும் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று இரவு மற்றும் அடுத்துவரும் நாட்களில் வாக்காளர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.
  • ஜனாதிபதி தேர்தல் முடிவாகி ஒரு வாரம் செல்லும் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும்.
  • தனியார் வாகனங்களில் தற்போதும் போஸ்டர்களைக் காண முடிகிறது. வேட்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மாத்திரமே அவ்வாறான போஸ்டர்களை ஒட்ட முடியும். அதுவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர வேறு எந்த வாகனத்திலும் வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையிலான போஸ்டர்களை ஒட்ட முடியாது. எனவே, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.
  • வாக்களிப்பு நிலையம் அல்லது வாக்களிப்பு நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வேட்பாளர்களுக்கு வாக்கு திரட்டும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. அத்துடன், யாராவது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என அழுத்தம் விடுக்கவும் முடியாது. 500 மீட்டருக்கு அப்பாலும் அவ்வாறு செயற்பட முடியாது.
  • விதிவிலக்கான வாய்ப்புகள் தவிர்த்து, வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லல், வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லல் என்பன முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்மான அனுமதி பெற்ற பஸ்களில் பயணிக்க முடியும்.
  • குடும்பங்கள் தமது வாகனங்களில் செல்ல முடியும்.
  • அங்கவீனமடைந்தவர்களை வாகனங்களில் வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
  • வாக்களிப்பு நிலைய வளாகத்தில் சின்னங்களை வரைதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு செய்தால் பொலிஸார் உங்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்.