by Bella Dalima 15-11-2019 | 8:11 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சேவையைப் பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்வுகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன.
பொலிஸ் திணைக்கள வளாகத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, பொலிஸ் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
துறைக்கு பொறுப்பான அமைச்சராக ஜனாதிபதி பொலிஸ் திணைக்களத்திற்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான பாராட்டுக்களை சேவைக்காலத்தில் தமக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
பொலிஸ் திணைக்களம் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு 11 மாதம் எனும் குறுகிய காலப்பகுதிக்குள், மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த போதைப்பொருள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான சட்டங்களைக் கொண்டு வர தம்மால் முடிந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினர் ஜனாதிபதிக்கு கௌரவமளிக்கும் வகையில் நேற்று (14) மாலை விசேட சந்திப்பொன்றை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர்.
முப்படையினரை பலப்படுத்தி தேசிய பாதுகாப்பு மற்றும் முப்படையினரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக தமது பதவிக்காலத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் இதன்போது பாராட்டப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்கள் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, ஜனாதிபதியின் சேவையை பாராட்டினர்.