by Staff Writer 14-11-2019 | 9:02 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்கனவே இலங்கை அணியை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியின் இந்த விஜயம் பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் நிலவுவதனை உறுதி செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ராவல்பின்டி மற்றும் கராச்சியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடத்தப்படவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வெற்றியுடன் நாடு திரும்பியது.