வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்: கண்டியில் கோட்டாபய தெரிவிப்பு

by Bella Dalima 12-11-2019 | 7:51 PM
Colombo (News 1st) முறையான பொருளாதாரத் திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ கண்டியில் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கண்டியில் நேற்று (11) மாலை ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் அரசியல்வாதிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஸ, தேர்தலுக்கு பின்னர் மலையகத்திலுள்ள அழகிய நகரமாக கண்டி நகர் மாற்றமடையும் என உறுதியளித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஸ,
மஹிந்த ராஜபக்ஸவை குறை கூறுவதற்காக அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன. கண்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவிருந்த அதிவேக வீதிகள், ஹம்பாந்தோட்டையிலிருந்து மாத்தறை வரை அமைக்கப்படவிருந்த அதிவேக வீதி, ரயில் மார்க்கங்கள் ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தினர். இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டதால், ஒப்பந்தக்காரர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த 4 இலட்சம் பேர் தொழிலை இழந்தனர். இதன் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. தௌிவான திட்டமொன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம். அதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பவுள்ளோம்
என குறிப்பிட்டார்.