MCC உடன்படிக்கையில் அவசரமாக கைச்சாத்திடும் ஆயத்தமில்லை: பிரதமர் அறிவிப்பு

by Staff Writer 06-11-2019 | 6:02 PM
Colombo (News 1st) Millennium Challenge Corporation உடன்படிக்கையை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவசரமாக கைச்சாத்திட எவ்வித ஆயத்தங்களும் இல்லையென உடுதும்பர காஷியப்ப தேரருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சட்டமூலம் தொடர்பில் அனைத்து தரப்பினதும் கருத்துக்களை கேட்டறிந்து அது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடிய பின்னரே உடன்படிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் தேரருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, Millennium Challenge Corporation உடன்படிக்கை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் எவ்விதத்திலும் கைச்சாத்திடப்பட மாட்டாது என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உடுதும்பர காஷியப்ப தேரருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதாக இருந்தால், பாராளுமன்றத்திலும் வெளியிலும் கலந்துரையாடிய பின்னரே அது இடம்பெறும் என சஜித் பிரேமதாஸ தெரிவிதுள்ளார். நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கைக்கும் தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். தேர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரே உடன்படிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் சஜித் பிரேமதாச தேரருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் கைச்சாத்திட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் மீள் பரிசீலனை செய்ததாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தேரருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, இந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்படும் அனைத்து உடன்படிக்கைகளையும் தேசிய பாதுகாப்பு , இறையாண்மை மற்றும் தேசிய தேவை கருதி மீள் பரிசீலனை செய்வதற்கும் அவை தேசிய தேவைக்கு முரணாக இருந்தால் அவற்றை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஸ அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற அனுமதியைப் பெற்றால் மாத்திரமே MCC உடன்படிக்கையை செயற்படுத்த முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.