திருட்டுத்தனமான இணக்கப்பாடுகள் இல்லை - சஜித்

திருட்டுத்தனமான இணக்கப்பாடுகள் இல்லை - சஜித் வலியுறுத்தல்

by Staff Writer 04-11-2019 | 8:20 PM
Colombo (News 1st) திருட்டுத்தனமான இணக்கப்பாடுகள் தன்னிடம் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் மற்றும் விஜகலா மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசியலில் ஈடுபடும் ஒருவர் அல்ல நான். அபிவிருத்திகளை மேற்கொள்வதாக எனது தந்தை கூறி அவர் அதனை உறுதியாக நிறைவேற்றினார். நாம் செய்வதாக கூறும் விடயங்களை உறுதியாக செய்வோம். 30 வருட யுத்தம் காரணமாகவே நான் எனது தந்தையை இழந்தேன். நான் எனது தந்தையை இழந்ததைப் போன்று இலட்சக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்தனர். தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்தத் தாய்நாட்டை உண்மையான ஒற்றையாட்சி, இறைமையுள்ள பிளவுபடாத நாடாக மாற்றுவேன் என்பதனை நான் கூற விரும்புகிறேன். அரசியலமைப்பில் ஒற்றையாட்சி, இறைமை என்று கூறிப் பலன் இல்லை. இந்த நாட்டு மக்களின் உள்ளத்தில் அது இருக்க வேண்டும். இனவாதம், மதவாதத்தை அடிப்படையாக வைத்து இந்த நாட்டில் தீ வைக்க முயலும் உரைகளுக்கு நாம் உறுதியாக சட்டப்படி தடை விதித்து, நாட்டை இறைமையைப் பாதுகாப்பதற்காக செயற்படுவோம் என்பதனை நான் இவ்வேளையில் கூறுகின்றேன்
என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வழமையான அரசியலில், சம்பிரதாய பூர்வமாக இடம்பெறும் அரசியல் டீல் காணப்பட்ட காலமொன்று காணப்பட்டது. என்னிடம் அரசியல் டீல் இல்லை. திருட்டுத் தனமான கலந்துரையாடல்களை நான் மேற்கொள்வதில்லை. என்னிடம் திருட்டுத்தனமான இணக்கப்பாடுகளும் இல்லை. மனிதாபிமானத்தில் பெயரால் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இந்த நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனம் ஆகியவற்றைப் பாதுகாத்து, எமது தாய் நாட்டில் வாழும் அனைத்து மக்கள் பிரிவினரையும் ஒரே மாதிரியாகக் கருத்திற்கொள்ளும் யுகத்தை, சமமாகக் கருதப்படும் அந்தத் தாய்நாட்டை உருவாக்குவதற்கு நாம் தயார்
எனவும் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் செல்வப்புத்திரர் முல்லைத்தீவு மாவட்டத்தையே தத்தெடுத்திருக்கிறார். அவர் அடிக்கடி இங்கு வந்துபோவதாகக் கேள்வி. கவனம். ரொம்பக் கவனம். பலவந்தமாகக் காணாமல்போனோர் என்று சொன்ன விஷயம் கேட்டா ஜனாதிபதி ​வேட்பாளர் என்ன சொல்றார். ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் என்ன சொல்கிறீர்கள். அப்ப வாய்விட்டுச் சிரிக்கிறார். ஹா ஹா ஹா என்று. அவ்வளவுதான். கோபம் வந்தால் சிரிக்கச்சொல்லியிருக்கான் யாரோ. சிரிச்சுப்போட்டு சகோதரரப்பார்க்கிறார். அவரும் ஒன்றும் சொல்றதா இல்ல. திருப்பிக் கேட்கிறா இதுக்கு என்ன பதில் சொல்றீங்க. என்ன சொல்றார். சீ... யுத்தம் நான் செய்யல்லயே. தளபதிமார் செய்த யுத்தம். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்ல. எப்படி தப்பினார். இது கோழைத்தனமான பதில். இவ்வளவு நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் நாட்டை விடுவித்தோம் இந்த நாட்டுக்கான பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள் கோழைத்தனமாக... நான் யுத்தம் செய்யல்ல... யுத்தம் செஞ்ச வேற யாரோ... அவங்களோட பார்த்துக்கொள்ளுங்க என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்
என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எந்தவித நிபந்தனையும் இன்றி தமிழரசுக் கட்சி தங்களுடைய முழு ஆதரவையும் எங்களுடைய கௌரவ சஜித் பிரேமதாச அவர்களுக்கு அளித்திருக்கிறார்கள். நாங்கள் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எங்களுடைய வாக்குகளை அளிக்காது நிராகரித்த பின்னர்தான் எங்களுக்கு ஏற்பட்ட அழிவை, இங்கு ஆண்டுகொண்டிருந்த தலைவர் உட்பட அனைத்து இன மக்களும் அழத்து ஒழிக்கப்பட்ட நிலைதான் காணப்படுகின்றது
என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நீங்கள் உங்கள் வாக்குச்சீட்டைப் பார்க்கும்போது அது பெரியதொரு இரண்டடி நீட்டமாக இருக்கின்றது. அந்த வாக்குச்சீட்டின் நடுவிலே இருக்கும் அன்னச் சின்னத்திற்கு எதிராகத்தான் நீங்கள் உங்கள் வாக்கை அளியுங்கள். அதை நீங்கள் மனதிலே வைத்து, இந்த முறை யானை என்ற சின்னம் இல்லை. யானையை இந்த முறை மறக்க வேண்டும். அன்னத்தைத் தான் நாங்கள் பார்க்க வேண்டும். அன்னச் சின்னத்திற்குத்தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் கூறியுள்ளார்.