பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டது

ஐ.எஸ். தலைவர் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டது

by Bella Dalima 30-10-2019 | 5:14 PM
Colombo (News 1st) ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (48) அமெரிக்காவினால் நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிரியாவின் வடமேற்கு நகரமான இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பெரிய வளாகத்தில் பதுங்கி இருப்பதை குர்துக்கள் அளித்த இரகசிய தகவல் மூலம் அமெரிக்கா அறிந்தது. பாக்தாதி பதுங்கி இருந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர். அமெரிக்காவின் கையில் சிக்கித்தவிப்பதை விட தன்னைத்தானே பலியிடுவது மேல் என முடிவு செய்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பாக்தாதி வெடிக்கச்செய்தார். இதில் பாக்தாதியும் அவருடன் இருந்த 3 குழந்தைகளும் பலியாகினர். இத்தகவலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் வெளியிட்டார். இதன்போது, பாக்தாதியின் உடலுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவரது உடல் ஆழ்கடலில் எடுத்துச்செல்லப்பட்டு வீசப்பட்டு விட்டதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். முன்னதாக, அல் கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலும் ஆழ்கடலில் வீசப்பட்டது. பயங்கரவாத அமைப்பின் தலைவர்களின் உடல்களை புதைக்காமல் கடலில் வீசுவதையே அமெரிக்கா வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.