மோதல்கள் இல்லாவிட்டால் அவர்களால் முன்னோக்கி பயணிக்க முடியாது: அனுரகுமார திசாநாயக்க

by Bella Dalima 29-10-2019 | 9:51 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இன்று காத்தான்குடியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பெண் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் அனுகுமார திசாநாயக்க, சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் 15 அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. இந்த 15 அரசாங்கங்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியே உருவாக்கின. 71 வருடங்களாக நாட்டில் இந்த பிரதான இரண்டு கட்சிகளுமே ஆட்சி புரிந்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளிலும் ஹக்கிம் , அமீர் அலி, அதாஉல்லா, ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் தொடர்புபட்டுள்ளனர். எனினும், நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது, என குறிப்பிட்டார். மேலும், ஆட்சியாளர்கள் நாட்டில் மோதல்களை உருவாக்குவதாகவும் ஒருவருக்கொருவர் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் நிலைமையை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட அனுரகுமார, இதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் மாத்திரம் யுத்தம் காரணமாக 45,000 பேர் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இன்று நாட்டில் மக்களின் பாதுகாப்பு பிரதான தலைப்பாக மாறியுள்ளது. எமக்குள்ள பாதுகாப்பு பிரச்சினை என்ன? இது ஜெனரல்களினால் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய யுத்தம் அல்ல. இது ஜெனரல்களுக்கு மேற்கொள்ளப்படும் அபகீர்த்தியாகும். எமது சமூகத்தில் இனவாத அமைப்புகள் தலைதூக்குவதற்கு அரசியல்வாதிகள் இடமளிக்காவிட்டால் இந்த நிலைமை ஏற்படாது. அவர்களுக்கு யுத்தம் தேவைப்படுகின்றது. மோதல்கள் இல்லாவிட்டால் அவர்களினால் முன்னோக்கி பயணிக்க முடியாது. எனவே, மொழி உரிமை மற்றும் அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்குவதற்காக நாம் செயற்படுவோம்.
என அனுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.