ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்து

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி வாழ்த்து

by Fazlullah Mubarak 27-10-2019 | 3:50 PM

தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர்.

மனித மனங்களில் படர்ந்திருக்கும் மடமை எனும் இருளைப் போக்கி அறிவொளி ஏற்றுவதாக, இத் திருநாளில் ஏற்றப்படும் தீப ஒளி அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நல்லினக்கம் பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வாழும் எமக்கு இன நல்லினக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் உறுதுணையாக அமைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் இத் தீபாவளி திருநாளில் அனைவரும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நீண்ட ஆயுளும் கிட்ட வேண்டும் என மனமார வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பிளவுபட்டுப் பிரிந்துசெல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், தமது உள்ளங்களிலுள்ள ஞானத்தின் ஒளி அகன்றுவிடாது பேணிச் சென்று ஐக்கியத்துடனும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமிசிங்க கூறியுள்ளார். மானிடம் மேலோங்கி, சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்தாது, ஏனையோரின் நலன்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து புராணக் கதைகள், சம்பிரதாயங்கள், சமயச் சடங்குகள் ஊடாகவும் மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.