Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று காலி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
நெலுவ நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகைதந்த கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ,
நாட்டு வளங்களினதும் நாட்டினதும் பெறுமதியை நாங்கள் அதிகரித்தோம். அவை இன்று இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளன. வளங்கள் விற்கப்பட்டுள்ளன. தவறான தீர்மானம் எடுத்ததால் நாட்டிற்கு பாதகம் ஏற்படும் என்பதற்கு இவை உதாரணங்களாகும். மக்கள் ஒரு செயற்றிட்டத்தை எதிர்பார்க்கின்றனர். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நோக்கு தேவைப்படுகிறது. திட்டமும் சட்டமும் இல்லாத நிலை நாட்டில் உருவாகி வருகிறது. அனைத்து வழிப்பறிகளும் இடம்பெறுகின்றன. பாதாள கோஷ்டியினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. வீதியில் செல்ல முடியாது. இந்த நிலைமையை மாற்றுவதற்கான காலம் வந்துள்ளது.
என குறிப்பிட்டார்.
இதேவேளை, இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு விவசாயிகள், செய்கையாளர்கள் தொடர்பில் எவ்வித கரிசனையும் செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து தரம் குறைந்த தேயிலையைக் கொண்டு வருவதாகவும் மிளகு இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளதால், தரமான தேயிலைக்கும் மிளகிற்கும் சர்வதேச சந்தையில் இருந்த சிறந்த விலை தற்போது இல்லாமற்போயுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
தாம் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற தரம் குறைந்த தேயிலையையும் மிளகையும் முற்றாக நிறுத்துவதாக அவர் வாக்குறுதியளித்தார்.