Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தேசிய ஒற்றுமை தொடர்பிலான கொள்கை இன்று நீர்கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கலந்துகொண்ட இந்த நிகழ்வு சர்வமதத் தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
தற்போது அரசியல் மேடைகளில் பலாலி விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பேசப்படுவதை நான் கண்டேன். சில மாகாணங்களில் சிங்கள மொழி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ் மொழி முதலில் உள்ளதாகவும் பாரிய சேறுபூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் கட்சி அலுவலகத்தில் அவர்களும் அவ்வாறே பயன்படுத்தியுள்ளனர். இதனை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? இந்த விடயம் சிங்கள மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் அரசியலரங்கில் சர்ச்சைக்கு வித்திடுகின்ற பிரச்சினையாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஸவின் அலுவலகத்திலுள்ள பெயர்ப்பலகையிலும் மொழிகள் அந்த வரிசையிலேயே உள்ளன. அது யாழ்ப்பாணத்தின் வாக்குகளைப் பெறுவதற்கு. இது சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு. இத்தகைய அரசியல்வாதிகளை வெறுத்து நிராகரிக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையையும் அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையை நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக மாத்திரமே உறுதிப்படுத்த முடியும். நாம் எந்தவொரு விவாதத்திற்கும் தயார். பாதுகாப்பு தொடர்பில் கிண்ணங்களை வெற்றிகொண்ட ஜெனரல்கள் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்களால் இத்தகைய பாதுகாப்பை வழங்க முடியாது. பாதுகாப்பற்ற தன்மைக்கான சமிக்ஞை அடிப்படையிலான பாதுகாப்பை மாத்திரமே அவர்களால் வழங்க முடியும். இதுவே மக்களின் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவது தொடர்பில் எமக்கும் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடாகும்.