குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் நச்சு

குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் 95 சதவீதம் நச்சு: அமெரிக்க ஆய்வில் தகவல்

by Bella Dalima 18-10-2019 | 5:03 PM
அமெரிக்காவில் குழந்தைகளுக்காக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் அவற்றில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ என்ற கூட்டமைப்பை செயற்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பாடசாலைக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள 168 வகையான குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில், இந்த அமைப்பு மேற்கொண்ட சோதனையில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நான்கில் ஒரு உணவுப்பொருளில் கன உலோகங்களான ஆர்செனிக், காரீயம், கேட்மியம் மற்றும் பாதரசம் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். நச்சு உலோகங்களைக் கொண்ட இம்மாதிரியான உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, அவர்களின் அறிவுத்திறன் மழுங்கடிக்கப்படுகிறது, மேலும் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும் என அவ்வமைப்பு விளக்கியது. மிகவும் நச்சுத்தன்மை உடைய உணவுகளின் பட்டியலில், பைகளில் அடைக்கப்பட்ட அரிசி சார்ந்த பொருட்கள், அப்பிள், திராட்சை சாறுகள், ஓட்ஸ் தானியங்கள், மாக்கரோனி (உலர் பாஸ்தா), சீஸ், பப்ஸ் வகை தின்பண்டங்கள் மற்றும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் வழக்கமாக உட்கொள்ளும் பிற உணவுகள் அடங்கும்.