ஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி

ஐ.நா.வில் கடுமையான நிதி நெருக்கடி: அன்டோனியோ குட்டரஸ் கவலை

by Bella Dalima 09-10-2019 | 3:58 PM
Colombo (News 1st) கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிர்கொண்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச்செயலாளா் அன்டோனியோ குட்டரஸ் கவலை தெரிவித்துள்ளாா். ஐ.நா.வின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் தொடா்பாக ஆலோசிக்கும் 5 ஆவது குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (08) நடைபெற்றது. இதில் உரையாற்றிய அன்டோனியோ குட்டரஸ், ஐ.நா. கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா். ஐ.நா.வின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் நிதி இல்லாவிட்டால் பட்ஜெட் திட்டங்களை முறையாக செயற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, பட்ஜெட் நடவடிக்கைகளுக்கான நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உறுப்பு நாடுகளின் நிதி ரீதியிலான ஆதரவைப் பொறுத்தே, ஐ.நா.வின் திட்டங்களை திறனுடனும் முழுமையாகவும் செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.