by Staff Writer 08-10-2019 | 8:06 PM
Colombo (News 1st) அரச வங்கிகளில் பெருமளவு கடனைப்பெற்று அதனை முறையாக செலுத்தத் தவறியதன் காரணமாக MTD Walkers நிறுவனம் தொடர்பில் அண்மைக்காலமாக அதிகம் பேசப்பட்டது.
இந்த நிறுவனத்தின் நிறைவேற்று உப தலைவராக பதவி வகித்த ஜெஹான் அமரதுங்க என்பவர் மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்த காலப்பகுதியில் அதே வங்கியில் பெற்றுக்கொண்ட பில்லியன் கணக்கான ரூபா கடன் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக தகவல்களை வௌியிட்டிருந்தது.
இறுதியில் MTD Walkers சரிவை எதிர்கொண்டதுடன், தமது நிறுவனத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு ரவி விஜேரத்ன தயாராகவிருப்பதாக அந்நிறுவனம் பங்குச்சந்தைக்கு அண்மையில் அறிவித்தது.
எவ்வாறாயினும், நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான கொடுக்கல் வாங்கல் நீதிமன்ற உத்தரவிற்கமைய இடை நிறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச்சந்தைக்கு MTD Walkers நிறுவனம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திற்கு அமைய, அந்நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதை இடைநிறுத்தும் வகையில் கொமர்ஷல் வங்கி நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை முழுமையாக செலுத்தும் வரை ரவி விஜேரத்னவிற்கு பங்குகள் விற்பனை செய்யப்படுவது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கி தமக்கு கிடைக்க வேண்டிய கடன் நிலுவையை அறவிடுவதற்காக அத்தகைய நடவடிக்கையினை அடுத்துள்ள நிலையில் மக்கள் வங்கி தமக்கு கிடைக்க வேண்டிய கடனை மீள அறவிடுவதற்காக என்ன செய்துள்ளது?
இந்த விடயத்தில் உள்ள பாரதூரத்தன்மை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தது.