by Fazlullah Mubarak 07-10-2019 | 10:13 AM
Colombo (News 1st) 30 ரயில்களை இன்று (07) முதல் சேவையில் ஈடுபடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அலுவலக ஊழியர்களுக்காக நாளாந்தம் 40 ரயில்கள் தேவைப்படுவதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமையை பவர் செட் எனப்படும் இரண்டு இயந்திரத் தொகுதிகளுடனான ரயில்களை சேவையில் ஈடுபடுத்தி எவ்வித இடையூறுகளும் இன்றி அலுவலக ஊழியர்களின் போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹவ, குருநாகல், பொல்கஹவல, காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி
இன்று காலை ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரை, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ரயில் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு 12 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.