ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

by Fazlullah Mubarak 07-10-2019 | 10:09 AM

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (07) இடம்பெற்று வருகின்றது.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகின்றது. அதற்கமைய, காலை 9 மணிக்கு ஆரம்பித்த வேட்புமனுத் தாக்கல் முற்பகல் 11 மணி வரையான 2 மணித்தியால காலப்பகுதிக்குள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வேட்புமனு தொடர்பான எதிர்ப்பை முன்வைப்பதற்கான கால அவகாசம், இன்று முற்பகல் 11.30 மணி வரை வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறுகின்றார். வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்ட பின்னர், அது தொடர்பான எதிர்ப்புக்களை ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் தேர்தர்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்களுக்கான இலட்சனையைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை இடம்பெறும் என பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் இம்முறை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிக வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 19 வேட்பாளர்களும் வேறு அரசியல் கட்சிகளின் 3 வேட்பாளர்களும் 19 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.