ஐ.தே.க சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்

by Staff Writer 03-10-2019 | 7:09 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று நடைபெற்ற கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தின் போது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் 2020 ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் விசேட சம்மேளனக் கூட்டம் இன்று முற்பகல் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சம்மேளனக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த விசேட சம்மேளனக் கூட்டத்தில் மேலும் சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதிகார பரவலாக்கல், தேர்தல் முறை மறுசீரமைப்பு மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுடன் செயற்படுத்தப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அர்ப்பணிப்பு செய்தல், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நியமனத்தை மீண்டும் உறுதிப்படுத்தல் என்பன அந்தப் பிரேரணைகளில் அடங்குகின்றன.