Colombo (News 1st) குற்றவியல் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கும் தேசிய அதிகார சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக சுஹத கம்லத் ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளைய தினத்திற்குள் அவர் இராஜினாமா செய்யாவிட்டால் ஜனாதிபதி செயலாளர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் இது தொடர்பில் கருத்து வௌியிடப்பட்டது.
சுஹத கம்லத் தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
அவர் நீதி அமைச்சின் கீழ் இயங்கும் குற்றவியல் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் அதிகார சபையின் தலைவராகவே இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார். இந்த நியமனத்தை விஜேதாச ராஜபக்ஸவே வழங்கியிருந்தார். அரச உத்தியோகத்தர்கள் இத்தகைய கருத்துக்களை வௌியிட முடியாது. நான் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். அவர் இராஜினாமா செய்யவுள்ளதாக நேற்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று அல்லது நாளை அவர் விலகாவிட்டால் ஜனாதிபதி செயலாளர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்.