Colombo (News 1st) இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் சிறிது காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலொன்றை கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு நேற்று (20) பகிரங்கப்படுத்தினார்.
அந்த தொலைபேசி உரையாடலில் தில்ருக்ஷி டயஸ் பின்வருமாறு பேசியிருந்தார்,
உங்கள் வர்த்தகம் இல்லாமற்போகும் என நான் எண்ணியிருந்தால், எனது வாழ்க்கையில் நான் அந்த வழக்கை தாக்கல் செய்திருக்க மாட்டேன். இந்த மோசமான அரசியலினால் உங்களின் அலுவலகத்திலுள்ள 7500-க்கும் அதிகக் கடிதங்களை நான் வாசித்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் அனைத்து கடிதங்களையும் வாசித்துள்ளேன். அதிகாரிகளுடன் நீங்கள் எப்படி இருந்தீர்கள், குடும்பங்களை எவ்வாறு பார்த்தீர்கள் என நான் அறிவேன். நிஸ்ஸங்க உண்மையில் நான் கவலையடைந்தேன். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்திருக்க மாட்டேன். அந்த முழு செயற்பாடு தொடர்பில் நான் வேதனையுற்றுள்ளேன். எனக்கு சட்டத்தை தயாரிக்கவும் தெரியும், சட்டத்தை மீறவும் தெரியும்
கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகங்களுக்கு நேற்று பகிரங்கப்படுத்திய இந்த குரல் பதிவு தொடர்பில், தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் வழங்கியுள்ளார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி அவர்களுக்கு,
அரச ஊழியர் என்ற வகையில் நீங்கள் பதிவு செய்துள்ள இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் பொதுமக்களுக்கு என்னால் தௌிவூட்ட முடியாது. அதனால் கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்.
உங்களுடனான இந்த கலந்துரையாடலை அரசாங்கத்தின் எந்த அமைச்சர் வழங்கியது மற்றும் எதற்காக என்பதை மக்களுக்கு கூறுங்கள்.
அந்த தொலைபேசி உரையாடலை நீங்கள் திரிவுபடுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக முழு உரையாடலையும் வௌியிடுங்கள்.
என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அந்த குரல் பதிவிலுள்ள தில்ருக்ஷி டயஸின் குரலை அவர் ஏற்றுக்கொண்டமையை கருத்திற்கொண்டு, அது தொடர்பிலான முதற்கட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தகுதியான ஒருவரை நியமித்து, அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை உடனடியாக முன்னெடுப்பதற்கு பொது சேவை ஆணைக்குழுவிற்கு திங்கட்கிழமை சட்ட மா அதிபர் அனுப்பவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.