வீதியோரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் 

வீதியோரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் 

by Staff Writer 04-09-2019 | 9:07 PM
Colombo (News 1st) வைத்தியசாலை மற்றும் மருத்துவக்கழிவுகளை வீதியோரங்களில் கொட்டும் செயற்பாடுகள் தொடர்பில் தற்போது தகவல்கள் வௌியாகி வருகின்றன. இன்றைய தினம் அவ்வாறு இரண்டு இடங்களில் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. மல்வானை - தொம்பே வீதியின் பஹூருவில பிரதேசத்தில் இன்று அதிகாலை மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. நள்ளிரவு 12 மணியளவில் மருத்துவக்கழிவுகள் இவ்வாறு வீதியருகில் கொட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறினர். வைத்தியசாலை கழிவுகளுடன் வருகை தந்த டிப்பர் வாகனம் அங்குள்ள CCTV-இல் பதிவாகியிருந்தது. இவ்வாறு கொட்டப்பட்ட கழிவுப்பொருட்களில் ஊசிகள், கையுறைகள், Saline குழாய்கள் போன்ற பொருட்கள் காணப்பட்டன. அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கழிவுகளுக்கு தீ வைக்க முயன்றதாக பிரதேச மக்கள் கூறினர். பிரதேச மக்களின் அறிவிப்பிற்கு அமைய, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தொம்பே - மீதீரிகல பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் டிப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. டிப்பரின் சாரதி மற்றும் உதவியாளராக தந்தையும் மகனும் செயற்பட்டுள்ளனர். வைத்தியசாலைக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடத்திற்கு, டிப்பரையும் சந்தேகநபர்களையும் அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அங்கு மருத்துவக் கழிவுகளை மீண்டும் டிப்பரில் ஏற்றுமாறு குறித்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கழிவுப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் தொம்பே பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேவேளை, இவ்வாறான ஒருதொகை கழிவுகள் வனாத்தவில்லு - புபுதுகம பகுதியில் கொட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் ஒருவரின் காணியில் கொட்டப்பட்டிருந்த நிலையில், இந்த மருத்துவக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். வர்த்தக செயற்பாடு என்ற போர்வையில், வௌிநாடுகளில் இருந்து தொன் கணக்கில் கழிவுகள் கொண்டுவரப்பட்டமையை நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், இந்த செயற்பாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை இதுவரையில் புலப்படவில்லை. அவ்வாறானதொரு பின்புலத்தில் வைத்தியசாலைக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.