சுதந்திரக் கட்சியை விட்டுச்சென்ற தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

by Bella Dalima 04-09-2019 | 8:05 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச்சென்ற தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். தேசியப்பட்டியலில் இருந்து கட்சியை விட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு சென்றவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணைகளுக்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் அவர்கள் விடயங்களை தௌிவுபடுத்த வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். மற்றுமொரு கட்சியில் உறுப்புரிமையைப் பெற்றால், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகும் என 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தௌிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இவ்வாறான கட்சி மாற்றங்களுக்கு காரணமான மஹிந்த ராஜபக்ஸ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மஹிந்த அமரவீர, அவ்வாறான எண்ணம் தமக்கு இல்லை என குறிப்பிட்டார்.