பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் குறித்த கணக்கெடுப்பு

பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் தொடர்பில் கணக்கெடுப்பு

by Staff Writer 25-08-2019 | 3:02 PM
Colombo (News 1st) பாடசாலைக்கு செல்லாத 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலான கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த பிள்ளைகளை அடுத்த தவணையிலிருந்து பாடசாலைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் H.M. அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் தேவையான அனைத்து உதவிகளை வழங்குவற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 22 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம், ஒருபோதும் பாடசாலைக்கு செல்லாத 17 பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 378 பிள்ளைகள், பாடசாலை கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் H.M. அபேரத்ன கூறியுள்ளார். இவர்களை, அடுத்த தவணையிலிருந்து பாடசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.